கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் தற்போது மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வடகர்நாடக மாவட்டங்களில் அதிக மழை பெய்கிறது. பெங்களூருவை பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு உள்மாவட்டங்களான ராய்ச்சூர், பீதர், கொப்பல், கலபுரகி மற்றும் தெற்கு உள்மாவட்டங்களான குடகு, சிக்கமகளூருவில் கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு நாளை (அதாவது இன்று) முதல் 3 நாட்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராமநகர் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.