மும்பையில் வருகிற 5-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
மும்பையில் வருகிற 5-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த மாதம் 11-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. எனினும் கடந்த 20 நாட்களாக நகரில் ஓரிரு நாட்கள் மட்டும் மிதமான மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று நகரில் பலத்த மழை பெய்தது. அன்று இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மும்பை நகரில் 17.9 செ.மீ.. மழை பெய்தது. மேற்கு புறநகரில் 14 செ.மீ., கிழக்கு புறநகரில் 10.9 செ.மீ. மழையும் பதிவானது.
இந்தநிலையில் நேற்றும் மும்பை மற்றும் பெருநகரப்பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. விடாமல் பெய்த மழையால் நகரில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. சாலைகளில் தண்ணீர் அந்தேரி சப்வேயில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பாதை மூடப்பட்டது. இதேபோல தாதர், பரேல், செம்பூர், குர்லா, காட்கோபர், மலாடு உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. பலத்த மழை காரணமாக மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. முன்னதாக
மும்பையில் நேற்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது, எனினும் வருகிற 5-ந் தேதி மும்பையில் ஒரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை தவிர நேற்று தானே, நவிமும்பை, வசாய் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அங்கும் 5-ந் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.