விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை - மத்திய அரசு முடிவு
கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.;
புதுடெல்லி,
கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்ததால், அதன் விலை உயரத் தொடங்கியது. விலை உயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
அதையும் மீறி, கோதுமை விலை உயர்ந்தது. சராசரியாக கிலோ ரூ.50 ஆக அதிகரித்து விட்டது. கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், கோதுமை விலை உயர்வை குறைக்க வெளிச்சந்தையில் கோதுமையை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
தனது சேமிப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை மத்திய உணவு அமைச்சகம் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். அதன்படி, மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகம், அந்த கோதுமையை மாவு மில்கள், தனியார் வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யும்.
வெளிச்சந்தையில் கோதுமை வரத்தை அதிகரித்து, அதன் விலையை குறைப்பதுதான் இதன் நோக்கம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.