மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை; சிபிஐயிடம் வழக்கை ஒப்படைப்பது ஏன்? - மத்திய அரசு விளக்கம்...!

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

Update: 2023-07-28 10:45 GMT

புதுடெல்லி:

மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி இனத்தவருக்கும் குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். சுமார் 40 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மே மாதம் 4-ந்தேதி குகி இனத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மணிப்பூர் அரசு ஜூலை 26ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த வழக்கில் ஜூலை 27ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பான மனுக்களை விசாரிக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் தலைமை நீதிபதி இல்லாததால் விசாரிக்க முடியவில்லை.

மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மணிப்பூர் வன்முறை வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு  கோரிக்கை வைத்து உள்ளார்.

மணிப்பூரில் நடந்த பலாத்கார வழக்கு உட்பட அனைத்து வழக்கின் விசாரணைகளையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் குற்றங்கள் மிகவும் கொடூரமானவை என்று மத்திய அரசு கருதுகிறது. குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் ஒரு தடுப்பு விளைவை ஏற்படுத்தும் வகையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான இந்த குற்றத்தை ஒரு சுதந்திரமான புலனாய்வு அமைப்பிடம் அதாவது சிபிஐக்கு விசாரணையை ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு (மாநில அரசின் ஒப்புதலுடன்) எடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்