மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 5 லட்சம் கோடி செலவு - நிர்மலா சீதாராமன்
கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா, ஜஹீராபாத் நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அதில், 20 சதவீதம் கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானாவிற்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இந்த திட்டத்தில் பல குளறுபடிகள் இருந்தன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவற்றை சரிசெய்து, அதன் நேரடி பலன் பரிமாற்றம் மூலம் செயல்படுத்துகிறது.
மேலும், வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலுங்கானா, தற்போது வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது. தெலுங்கானாவில் விவசாயிகளின் கடன் அதிகமாக உள்ளது. விவசாயிகள் தற்கொலையில் நான்காவது இடத்தில் உள்ளது." தெலுங்கானா அரசு மத்திய திட்டங்களின் பெயர்களை மாற்றி மாநிலத்தின் திட்டங்களாக காட்டுவதாக குற்றம் சாட்டினார்.