நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.;

Update: 2024-01-30 06:45 GMT

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று காலை கூடியுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோச்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, மதிமுக எம்.பி., வைகோ, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொதுவாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, கூட்டத்தொடரின் அலுவல்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவது வழக்கம்.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1-ஆம் தேதி தாக்கல் செய்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

Tags:    

மேலும் செய்திகள்