கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.315 ஆக உயர்வு: மத்திய மந்திரிசபை முடிவு

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.315 ஆக உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2023-06-28 22:21 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

2023-2024 ஆண்டு கரும்பு பருவத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 10 ரூபாய் உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனால், குவிண்டாலுக்கு ரூ.305 ஆக இருந்த கரும்பு விலை, ரூ.315 ஆக உயர்கிறது.

இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பிரதமர் மோடி, எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது.

2014-2015 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.210 ஆக இருந்த கரும்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை, தற்போது ரூ.315 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை

நாட்டின் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்க நிதி உதவி அளிக்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதாவை கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதுபற்றி மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

ஏற்கனவே உள்ள அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரிய சட்டம் நீக்கப்பட்டு, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பிரதமர் மோடி தலைமையில் 15 முதல் 25 பிரபல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவால் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வகிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ரசாயன உரங்களைகுறைத்தால் ஊக்கத்தொகை

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து, மாற்று உர பயன்பாட்டை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க 'பி.எம்.-பிரணாம்' என்ற புதிய திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

இதுகுறித்து மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாற்று உரங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு இத்திட்டப்படி மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும்.

உதாரணமாக, 10 லட்சம் டன் ரசாயன உரங்களை பயன்படுத்தி வரும் ஒரு மாநிலம், அதில் 3 லட்சம் டன் உரங்களை குறைத்தால், மானிய சுமையில் ரூ.3 ஆயிரம் கோடி சேமிக்கப்படும். அதில் 50 சதவீதமான ரூ.1,500 கோடியை அம்மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கும்.

ரூ.3.70 லட்சம் கோடி திட்டங்கள்

மேலும், ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பில், விவசாயிகளுக்கான புதுமையான திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது. மண் வளத்தை அதிகரிப்பது, உற்பத்தியை பெருக்குவது, இயற்கை உர பயன்பாட்டை ஊக்குவிப்பது, விவசாயிகள் வருவாயை பெருக்குவது ஆகியவற்றுக்காக இத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இயற்கை உரங்களை பயன்படுத்த ரூ.1,451 கோடி மானியம் அளிப்பதும் இத்திட்டங்களில் அடங்கும்.

இதுதவிர, தற்போதைய உர மானிய திட்டத்தை 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மண்ணில் கந்தக பற்றாக்குறையை போக்க கந்தகம் கலந்த யூரியாவை (யூரியா கோல்டு) முதல் முறையாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமருக்கு பாராட்டு

முன்னதாக மத்திய மந்திரிசபை கூட்டம் தொடங்கியவுடன், அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு வெற்றிகரமான பயணம் மேற்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்தியாவுக்கு தனது தலைமையை அளித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

75 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில், இந்திய பிரதமர் ஒருவர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது தடவையாக உரையாற்றி உள்ளார். அமெரிக்க எம்.பி.க்கள் எழுந்து நின்று கைதட்டி உள்ளனர்.

வெளிநாட்டு தலைவர் வரும்போது, அமெரிக்க ஜனாதிபதி சில நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பார். ஆனால், மோடியுடன் 3 நாட்களாக பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டுள்ளார்.

ஐ.நா. தலைமையகத்தில் மோடி பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில், 135 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அது, இந்தியாவின் தலைமையை உலகம் அங்கீகரித்ததை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்