டெல்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான விமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். எனினும், சமீப நாட்களாக கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், திருப்பி விடப்பட்டும், காலதாமதத்துடனும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் அவதியடைந்து உள்ளனர். கடும் குளிரால் மக்களின் உடல்நிலையும் பாதிப்படைந்து காணப்படுகிறது.
குளிரலையால் வடமாநிலங்களில் உயிரிழப்பும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3-வது முனையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென விமான நிலையத்தின் கழிவறைக்கு சென்ற அவர் தனது பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. குடும்ப சூழலால் அல்லது அதிக மனஉளைச்சலால் அவர் இந்த முடிவை மேற்கொண்டாரா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.