"பழங்குடியினர் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Update: 2022-11-20 11:57 GMT

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது மராட்டிய மாநிலத்தில் அவரது யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்த நடைபயணத்தின் போது புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜல்கான்-ஜமோத் பகுதியில் ஆதிவாசி மகளிர் தொழிலாளர்களிடையே ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது அவர், பழங்குடியினர் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பலவீனப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், பழங்குடியினரின் நிலங்களை பறித்து தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க பிரதமர் விரும்புவதாக விமர்சித்தார்.

மேலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பழங்குடியினர் நலனுக்கான சட்டங்களை மேலும் பலப்படுத்துவதுடன், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார். பழங்குடியினர் நாட்டின் முதல் உரிமையாளர்கள் என்றும் பிற குடிமக்களைப் போலவே அவர்களுக்கு சம உரிமைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்