அதானியின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம் - சித்தராமையா

வருகிற நாட்களில் அதானியின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக சித்தராமையா கூறினார்.;

Update: 2023-02-04 22:04 GMT

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பீதரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கருத்து வேறுபாடு இல்லை

கர்நாடக காங்கிரசில் தற்போது 71 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில் 99 சதவீதம் பேர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவார்கள். சி.டி.ரவி எம்.எல்.ஏ. பொய் பேசும் அரசியல்வாதி.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று நாங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. எங்கள் கட்சியின் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீலுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, பா.ஜனதா 600 வாக்குறுதிகளை வழங்கியது.

தரமான பணிகள்

அதில் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அமல்படுத்தினோம்.

திட்ட செலவுகளில் 40 சதவீதத்தை கமிஷனாக பெறுகிறார்கள். மீதமுள்ள 60 சதவீதத்தில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். அதுபோக 42 சதவீத நிதி தான் மிச்சமாகும். இதை வைத்து எப்படி தரமான பணிகளை மேற்கொள்ள முடியும். நான் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகும்போது, கர்நாடகத்தின் கடன் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.5 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

கடன்கள் தள்ளுபடி

அதானி உள்ளிட்ட பெரிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்தார். தற்போது அத்தகைய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. வருகிற நாட்களில் அதானியின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்