மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு: கனிமொழி காட்டம்
பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது என்று திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி பேசியதாவது:
அறிவும் மானமும் மனிதருக்கு அழகு என்றார் தந்தை பெரியார். அறிவு என்பது கல்வியின் வழியாக பெறுவது. கல்வியின் வழியாக மானம், சுயமரியாதையை மக்கள் உணர்ந்து கொள்வர். இது நடந்தும்விடக் கூடாது. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களாக ,ஒதுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு வழிவழியாக கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.
அந்த வழியில்தான்- மறுக்கப்பட்ட நியாயங்களுக்கு போராடக் கூடிய சிலர் இன்று ஆட்சி நடத்தும் நிலையில் இருக்கிறோம். பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையில் கல்வித்துறையில் முதலீடு பற்றி பேசி இருக்கிறார்கள். இன்னமும் அதற்காக நாம் காத்திருக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஜிடிபியில் 4.77% கல்விக்காக ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்விக்காக ஜிடிபியில் 12% ஒதுக்கீடு செய்கிறார். ஆனால் இந்த அரசாங்கம், மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 2.5% மட்டும் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. பூட்டானில் கல்விக்காக 8% ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கல்விக்கான ஒதுக்கீடு 6% கூட எட்டப்படவில்லை.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசானது, கல்வி என்பது மத்திய அரசுக்கு மட்டுமே உரிய ஒன்றாக கருதுகிறது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசுதான் 60% தர வேண்டும். 40%தான் மாநிலங்கள் தர வேண்டும். ஆனால் உண்மை நிலவரம் என்றால் செஸ் என்ற பெயரில் மாநிலங்களில் இருந்து சாமானியர்களிடம் இருந்து 4% வரி வாங்குகின்றனர். அதாவது மாநிலங்கள்தான் சுமார் 50% நிதியை வழங்குகிறது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு வைத்துக் கொண்டு தர மறுக்கிறது. அட்சயப் பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு கையில் பிச்சைப் பாத்திரத்தை திணிக்கக் கூடிய நிலைமையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
பிரதமர் ஶ்ரீ என்ற பள்ளிகள் திட்டம், புதிய கல்விக் கொள்கையை திணிக்கக் கூடிய திட்டம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்த நிலைப்பாட்டுக்காக தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ500 கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது. இது எப்படி இருக்கிறது? எங்களிடம் இருந்து பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு, புதிய கல்விக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் உங்களுக்கு நிதி தருவோம் என்பதாக உள்ளது. அப்படியானால் தமிழ்நாடு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லையா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையா? நீங்கள் மட்டும்தான் மக்கள் பிரதிநிதியா? உங்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? உங்களுடைய இதே பிரதமர் குஜராத்தில் பிரதமராக இருந்த போது மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். தற்போது பிரதமராகிவிட்ட பின்னர் மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடியவராக மாறி இருக்கிறார்.
எங்களுடைய கல்விக் கொள்கையில், மக்கள் நம்பிக்கையில், எங்கள் மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் கொள்கைகளில் மத்திய அரசு தலையிடுவதற்கு யார்? என கேட்கிறோம். மொழிக் கொள்கையை வைத்துக் கொண்டு திமுக அரசியல் செய்கிறது. ஏமாற்றுகிறது என இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர். உலகிலேயே வேறு எங்கேயாவது மொழிப் போராட்டத்திலேயே உயிரையே தியாகம் செய்த நூற்றுக்கணக்கானவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என காட்ட முடியுமா? உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் கூட நீங்கள் பங்கேற்றவர்கள் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.