குடியுரிமை சீர்திருத்த சட்டம் பெயரில் மத்திய அரசு மக்களை குழப்புகிறது: மம்தா பானர்ஜி தாக்கு

மத்திய அரசு எங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை பாக்கி தொகையை இன்னும் அளிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.;

Update: 2023-01-31 12:35 GMT


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டுபேசினார். அவர் பேசும்போது, மத்துவா சமூக மக்களை நானும், திரிணாமுல் காங்கிரசும் அதிக கவனம் எடுத்து பாதுகாத்து வருகிறோம்.

அவர்கள் கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள். நீண்டகாலம், நாங்கள் அவர்களை கவனித்து வருகிறோம். ஆனால், தேர்தல் நெருங்கும்போது, பா.ஜ.க. அவர்களிடம் சென்று, நாங்கள் உங்கள் நண்பர்கள் என கூறி குடியுரிமை சீர்திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) பற்றி பேசி குழப்பி விடுகின்றனர்.

இந்த சி.ஏ.ஏ. சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்கப்படும்.

ஆனால், இந்த சட்டத்தின் கீழ் விதிகளை அரசு இன்னும் வகுக்கவில்லை. அதனால், இதுவரை யாருக்கும் இச்சட்டத்தின்படி, குடிமக்கள் அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசு எங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை பாக்கி தொகையை இன்னும் அளிக்கவில்லை என்று விரிவாக வேறு எதுவும் கூறாமல் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

எனினும், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சாகர்தீகி நகரில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த நிர்வாக ரீதியிலான மறுஆய்வு கூட்டத்தில் அவர் பேசும்போது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது என மத்திய அரசை சாடி பேசினார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மேற்கு வங்காளம், மத்திய அரசின் நிதி உதவி இன்றி மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் எந்தவித உதவியும் இன்றி இதனை நாங்கள் செய்து வருகிறோம். மத்திய அரசு எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும். ஆனால், நிதியை விடுவிக்காமல் உள்ளது.

இந்த விவகாரம் பற்றி பல முறை எடுத்து உரைத்தும் அதில் பலனில்லை. இந்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது, மத்திய அரசின் தனிப்பட்ட நிதியல்ல. அது மாநிலத்தில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான உரிமை என்று கடுமையாக பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்