நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை-மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.;
புதுடெல்லி,
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அடுத்ததாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த பணிகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.அதைத்தொடர்ந்து இந்த பணிகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இன்னும் புதிய அட்டவணை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் புதிய மாவட்டங்கள் அல்லது துணை மாவட்டங்களை உருவாக்குவதற்காக நிர்வாக எல்லைகளை முடக்கும் தேதி வருகிற ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
இந்த காலக்கெடு முடிவடைந்து 3 மாதங்களுக்குப் பின்னர்தான் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது விதிமுறையாகும். அந்தவகையில் செப்டம்பர் 30-ந்தேதி வரை இதற்கு வாய்ப்பு இல்லை.இதைப்போல மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் 30 லட்சம் அரசு ஊழியர்களுக்கான பயிற்சிக்கு 2 முதல் 3 மாதங்கள் தேவைப்படும்.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கும். வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் இடம்பெறும்.அக்டோபர் மாதத்தில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் தொடங்கும்.இதில் தேர்தல் பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே நடைபெறும் வாய்ப்பு உள்ளது.இந்த தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது ஒருபுறம் இருக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடந்தாலும், அது டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கணக்கெடுப்பில் குடிமக்களிடம் 31 கேள்விகள் கேட்கப்படும் என பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.குறிப்பாக, குடும்பங்களில் தொலைபேசி இணைப்பு, இணையதள வசதி, செல்போன் அல்லது ஸ்மார்ட்போன், சைக்கிள், ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள், கார், ஜீப் அல்லது வேன் போன்றவை உள்ளனவா? என்பன போன்ற கேள்விகள் கேட்டு விவரங்கள் சேகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதைப்போல வீட்டில் என்ன தானியங்கள் சாப்பிடுகின்றனர்? குடிநீர் ஆதாரம், மின்சார வசதி, கழிவறை வகை, குளியலறை வசதி, சமையலறை, கியாஸ் இணைப்பு, டி.வி., ரேடியோ உள்ளிட்டவை குறித்தும் கேட்கப்படும்.மேலும் வீட்டின் தரை, சுவர், கூரை போன்றவை குறித்தும் விரிவான விவரங்கள் சேகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.