பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக உருவெடுத்துள்ள சி.டி.ரவி
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக சி.டி.ரவி உருவெடுத்துள்ளார்.
பெங்களூரு-
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பரபரப்பாக பணியாற்றி வருகிறது. பா.ஜனதா கட்சியில் முன்னணி தலைவர்கள் பலர் இருந்தும் தற்போது அக்கட்சியின் மேலிட தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு வருபவர் சி.டி.ரவி.
சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் இவர் முன்னாள் மந்திரியும் ஆவார். இவர் மக்கள் பணியாற்றியதை விட கட்சிப்பணிகளில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவார். மேலும் இவரது சர்ச்சை பேச்சுக்கள் பா.ஜனதா கட்சியைப் பற்றி மக்கள் எப்போதும் பேசும் அளவில் வைத்திருக்கும்.
தடாலடியான பேச்சுக்கள், சர்ச்சை கருத்துக்கள், அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக வைத்திருக்கும் செயல், இந்துத்துவா மற்றும் இந்து மத காரியங்களை முன்னெடுத்துச் செல்வது, கட்சிக்கும், தொண்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது என சி.டி.ரவியின் செயல்பாடுகள் எப்போதும் மக்களிடையே பேசும் பொருளாக இருந்து வருகிறது. இதன்காரணமாகவே இவருக்கு கட்சி மேலிடம் தேசிய பொதுச் செயலாளர் பதவியும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் பதவியையும் வழங்கி உள்ளது.
இப்படி எப்போதும் பரபரப்பாக காணப்படும் சி.டி.ரவியை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முன்னணி பேச்சாளராக பயன்படுத்த பா.ஜனதா தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பெருவாரியான வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்றும் பா.ஜனதா கணக்கு போட்டுள்ளது.
கர்நாடகத்தில் முன்னணி சமுதாயமாக கருதப்படும் ஒக்கலிக சமுதாய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் சி.டி.ரவி, அடிப்படையில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் இருந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவர் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தில் முதலில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் சேர்ந்த அவர் அதையடுத்து பா.ஜனதாவில் இணைந்தார். கடந்த 1999-ம் ஆண்டு சிக்கமகளூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாகீர் அகமதுவிடம் 982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்ட சி.டி.ரவி, 2004-ம் ஆண்டு முதல் அத்தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி வெற்றிகண்டு வருகிறார். சிக்கமகளூரு தொகுதியை தன் கோட்டையாக வைத்திருக்கும் சி.டி.ரவி சமீபத்தில் திப்பு சுல்தானை கொன்றது ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்த உரிகவுடா மற்றும் நஞ்சேகவுடா என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனாலேயே அவருக்கு பா.ஜனதாவில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.