சி.பி.ஐ. (எம்.எல்.) பொது செயலாளருடன் நிதிஷ் குமார் சந்திப்பு; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு பற்றி ஆலோசனை
டெல்லியில் மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளரை சந்தித்து நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.;
புதுடெல்லி,
பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவுக்கு பின்பு, வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அவரது கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் மணிப்பூரில் கடந்த வெள்ளி கிழமை பா.ஜ.க.வில் இணைந்தனர். பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பணபலத்தினால் எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறது என கட்சி தலைவர் ராஜீவ் ரஞ்சன் குற்றச்சாட்டாக கூறினார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நீடித்தது.
ரஞ்சன் கூறும்போது, எங்களை தடுத்து நிறுத்த எவ்வளவு போராடினாலும் கவலையில்லை. 2023-ம் ஆண்டில் நாங்கள் தேசிய கட்சியாக உருவெடுப்போம் என கூறினார்.
நிதிஷ் குமார் தனது வாழ்வில் ஒரு போதும் பிரதமராக முடியாது. அவரால் பிரதமர் வேட்பாளராக கூட முடியாது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற மேலவை எம்.பி. மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி பதிலடியாக கூறினார்.
இந்த சூழலில், நிதிஷ் குமார் நேற்று முன்தினம் டெல்லி சென்றுள்ளார். இந்த டெல்லி பயணத்தின்போது, ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசினார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டன என கூறப்படுகிறது.
பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்பு நிதிஷ் குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், அவரது டெல்லி பயணம் மற்றும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவது மற்றும் அவரது கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் திட்டம், பிரதமர் வேட்பாளர் திட்டம் ஆகியவை அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
இதுபற்றி டெல்லியில் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விட்டால், பின்னர் ஒரு நல்ல சூழல் உருவாக்கப்படும். எனக்கு பிரதமராகும் ஆசையோ மற்றும் நோக்கமோ கிடையாது என கூறினார்.
தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள நிதிஷ் குமார், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளரான தீபன்கர் பட்டாச்சார்யாவை அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், பீகாரின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதித்ததுடன், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பன்முக தன்மை கொண்ட மற்றும் விரிவான அடைப்படையிலான எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுபற்றி நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, பீகாரில் 7 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, அரசு நடத்தி வருகின்றன. கருத்தொருமித்து பீகாரின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது எப்படி என்பது பற்றி நாங்கள் விவாதித்தோம்.
பொதுமக்களின் நலன்கள் மற்றும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் மேலே கொண்டு வருவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம் என கூறியுள்ளார். தங்களது கைகளில் அதிகாரம் உள்ளவர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். சில காலம் பொறுத்திருங்கள். அது நல்ல முறையில் நடக்க போகிறது என்று கூறியுள்ளார்.