நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.;
பாட்னா,
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது.
தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் தேர்வு நடந்தபோதே எழுந்தன. அது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்த நிலையில், ஜூன் 4ம்தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகி இருந்தன.
குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவாக 67 மாணவ-மாணவிகள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர். இதைப்போல தேர்வின் போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேரமிழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது. இதுவும் பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அம்பலமானதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்தன. மறுபுறம் இந்த மோசடிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த அதில் கோரப்பட்டு இருந்தன. இந்த முறைகேடு விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த சூழலில் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சுப்ரீம்கோர்ட்டு இன்று விசாரிக்க உள்ளது. நீட் முறைகேடுகள் வழக்குகள் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது. அவர்களது மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடைய கும்பலுடன் எய்ம்ஸ்-பாட்னா மாணவர்கள் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்றைய சுப்ரீம்கோர்ட்டின் விசாரணைக்குப் பின்னர் நீட் தேர்வின் நிலைமை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.