ஆந்திர முதல்-மந்திரியின் சித்தப்பா பாஸ்கர் ரெட்டி கைது - கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிரடி
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில், மற்றொரு சித்தப்பாவான பாஸ்கர் ரெட்டியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.;
புதுடெல்லி,
முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜசேகரரெட்டியின் தம்பி ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி. இவர் தற்போதைய முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஆவார்.
முன்னாள் எம்.பி.யான விவேகானந்த ரெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் 15-ந் தேதி கடப்பா மாவட்டம், புலிவேந்துலாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ. விசாரணை
இந்த கொலையில், விவேகானந்த ரெட்டியின் மற்றொரு சகோதரரான ஒய்.எஸ்.பாஸ்கர் ரெட்டிக்கும், அவரது மகன் ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டிக்கும் தொடர்பு உண்டு என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கொலை வழக்கை முதலில் எஸ்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது. பின்னர் 2020-ம் ஆண்டு, ஜூலை மாதம் இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சி.பி.ஐ. கடந்த 2021 அக்டோபர் 26-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பாஸ்கர் ரெட்டி கைது
இந்த நிலையில், இவ்வழக்கில் ஒய்.எஸ்.பாஸ்கர் ரெட்டியை (ஜெகன்மோகன் ரெட்டியின் மற்றொரு சித்தப்பா) அவரது இல்லத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று இதே வழக்கில் பாஸ்கர் ரெட்டியின் மகன் அவினாஷ் ரெட்டியின் உதவியாளர் உதய் ரெட்டியை சி.பி.ஐ. கைது செய்தது நினைவுகூரத்தக்கது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கடப்பா தொகுதியில் அவினாஷ்ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு விவேகானந்த ரெட்டி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவினாஷ் ரெட்டிக்குப் பதிலாக மறைந்த ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயாம்மாவுக்கு அல்லது அவரது மகள் ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு 'சீட்டு' தரவேண்டும் என்று கேட்டதாகவும், அதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.