டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம்..!
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது.
புதுடெல்லி,
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் 12-ந் தேதி (நாளை) நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் 13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் நிலை குறித்து எடுத்துக் கூறுவதோடு, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காவிரி நீர் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.