டெல்லியில் இன்று அவசரமாக கூடுகிறது, காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசரமாக கூடுகிறது.
புதுடெல்லி,
பயிர்கள் வாடுவதால் தண்ணீர் அவசியம் என்ற நிலையில் காவிரி நீரை உரிமையோடு கேட்டு தமிழ்நாடு போராடி வருகிறது. ஆனால் அணைகளில் நீர் இருப்பு இல்லை எனக்கூறி தண்ணீரை திறக்க கர்நாடகம் தயக்கம் காட்டி வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் 16-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகத்தை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
காவிரி நதிநீர் பங்கீட்டில் ஒழுங்காற்றுக்குழு அந்தந்த மாநிலங்களுக்கு தங்களது முடிவை வேண்டுகோளாக அல்லது பரிந்துரையாகத்தான் வைக்கும். இந்த பரிந்துரையை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால் அந்த விஷயத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடாது. ஆனால் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும் பட்சத்தில் மேலாண்மை ஆணையம் தலையிடும்.
கர்நாடகம் தயக்கம்
சமீப காலமாக கர்நாடக அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை என கர்நாடகம் தெரிவித்து வருவதால் கடந்த சில கூட்டங்களில் ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக கூடி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்த வகையில் நேற்று முன்தினமும் ஒழுங்காற்றுக்குழு விடுத்த பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்த தயக்கம் காட்டி இருப்பதாக தெரிகிறது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அவசரமாக கூட்ட, ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் நேற்று முடிவு எடுத்து அறிவித்தார்.
26-வது கூட்டம்
இதன்படி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது 26-வது கூட்டம் ஆகும்.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
எனவே ஆணையம் ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைப்படி 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடுமா? அல்லது தமிழ்நாட்டின் வலியுறுத்தலை ஏற்று கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவிடுமா? என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.