பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு: களஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்
சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான களஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
பாட்னா,
பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-மந்திரி நிதிஷ் குமார் அரசு உத்தரவிட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொங்கப்பட்டது. இந்த முதற்கட்ட பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள வீடுகள் கணக்கிடப்பட்டன.
அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி மக்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் தொடர்பான தரவுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்தும் 2-ம் கட்ட கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பின் முழு செயல்முறையும் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இதனிடையே கடந்த மே மாதம் 14-ந் தேதி சாதி வாரி கணக்கெடுப்புக்கு தடைவிதித்து பீகார் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து, 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் மீண்டும் வேகமெடுத்தன.
இந்த நிலையில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான களஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாதி வாரி கணக்கெடுப்புக்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலியில் கள ஆய்வின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் பணியை மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறினர்.