ஜம்மு காஷ்மீரில் ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருள் பறிமுதல்
ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் இதுவரை ரூ.2.32 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள், மது உள்ளிட்டவற்றை கொடுப்பதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் முடிந்து விட்டது. அங்கு இதுவரை ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், "வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை விநியோகம் செய்வதைத் தடுக்க பல்வேறு அரசு அமைப்புகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
இதில் காவல் துறையினர் அதிகபட்சமாக ரூ.90.83 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல வருமான வரித்துறையினர் ரூ.42 லட்சம், கலால் வரித்துறையினர் ரூ.1.01 கோடி மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் ரூ.2.32 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்" என்றார்.