புதுச்சேரியில் அரிசி - சர்க்கரைக்கு பதில் பணம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரைக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றுமுதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.;
புதுச்சேரி:
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ரூ.12 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் இந்த ஆண்டு மிகவும் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இந்த தொகுப்பு 800 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பட்டாசு அதன் விலையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அரசு சார்பில் ரூ.3.5 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கான்பெட் நிறுவனம் மூலமும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பாப்ஸ்கோ, கான்பெட் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு எளிமையாக பொருட்கள் கிடைப்பதுடன், விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது. தீபாவளியையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.