கிராம கோர்ட்டுகளை உருவாக்க கோரிய வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கிராம கோர்ட்டுகளை உருவாக்க கோரிய வழக்கில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
அனைத்து மாநிலங்களிலும் கிராம கோர்ட்டுகளை உருவாக்க கோரி டெல்லியை சேர்ந்த அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், 'கிராம கோர்ட்டு சட்டம் இயற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும், பல மாநிலங்கள் கிராம கோர்ட்டுகளை ஏற்படுத்தவில்லை' என வாதிட்டார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து ஐகோர்ட்டுகளின் தலைமை பதிவாளர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.
கிராம கோர்ட்டு சட்டம் 2008 என்பது ஊரக பகுதிகளில் விரைவான மற்றும் அனைவரும் எளிதில் அணுகும் வகையிலான நீதி வழங்குவதற்காக கிராம கோர்ட்டுகளை உருவாக்குவதற்கான சட்டம் ஆகும்.
இதன்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் 445 கிராம கோர்ட்டுகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் 226 தற்போது இயங்கி வருகின்றன.