தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு, அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் திட்டத்துக்கு எதிரான மனுக்கள், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2023-10-16 22:01 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க, ரொக்கத்துக்கு பதிலாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் மசோதா, கடந்த 2017-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான அறிவிக்கை, 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதன்படி, இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமோ தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். கட்சிகள், அந்த பத்திரங்களை வங்கிக்கணக்கில் செலுத்தி, பணமாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஒருவர் தனியாகவோ அல்லது கூட்டு சேர்ந்தோ தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளிக்கலாம். இத்திட்டத்தில் நன்கொடை அளித்தவர் யார் என்றே தெரியாது.

பொதுநல மனுக்கள்

இதற்கிடையே, யார் என்று தெரியாதவர் மூலம் நன்கொடை பெறும் தேர்தல் பத்திர திட்டம், ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரி, 'ஜனநாயக சீர்திருத்த சங்கம்' என்ற தொண்டு நிறுவனம், கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.

அந்த அமைப்பு இடைக்கால தடை கேட்ட போதிலும், சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மத்திய அரசிடமும், தேர்தல் கமிஷனிடமும் விளக்கம் கேட்டது.

அடுத்தடுத்து மேலும் 3 பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 4 மனுக்களும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.

ரூ.12 ஆயிரம் கோடி

கடந்த 10-ந் தேதி இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதற்கு முன்பே இம்மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனத்தின் வக்கீல் பிரசாந்த் பூஷண் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி நன்கொடை பெற்றிருப்பதாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு, ஒரு பெரிய கட்சிக்கு கிடைத்திருப்பதாகவும் மற்றொரு வக்கீல் கூறினார்.

இதையடுத்து, 4 பொதுநல மனுக்கள் மீது அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் கூறினர்.

5 நீதிபதிகள் அமர்வு

இந்நிலையில், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இ்வ்வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றியது. இதுகுறித்து அந்த அமர்வு கூறியதாவது:-

தேர்தல் பத்திர திட்டத்தின் அவசர முக்கியத்துவம் கருதி, இதை அதிக நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றுமாறு எங்களுக்கு ஒரு மனு வந்தது.

ஆகவே, பிரச்சினையின் முக்கியத்துவம் கருதியும், அரசியல் சட்டத்தின் 145(4)-வது பிரிவு (சுப்ரீம் கோர்ட்டு நடைமுறையை ஒழுங்குபடுத்தும் விதி) சம்பந்தப்பட்டது என்பதாலும், அதிகாரப்பூர்வ பிரகடனத்துக்காக, இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுகின்றன.

ஏற்கனவே நிர்ணயித்த அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் அரசியல் சட்ட அமர்வு விசாரணை நடத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்