பெங்களூருவில் ஒரே நாளில் 146 பேர் மீது வழக்கு

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பெங்களூருவில் ஒரே நாளில் 146 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து சிறப்பு கமிஷனர் கூறியுள்ளார்.

Update: 2022-12-24 18:45 GMT

பெங்களூரு:-

146 பேர் மீது வழக்கு

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு நகர் முழுவதும் போக்குவரத்து போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 146 பேர் குடிபோதையில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 146 பேர் மீதும் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து சிறப்பு கமிஷனர் எம்.ஏ. சலீம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கவலை அளிக்கிறது

பெங்களூருவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 146 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. விபத்துகளை தடுப்பது, விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது போக்குவரத்து போலீசாரின் முதன்மை கடமையாகும். உயிரிழப்புகளை தடுக்கும் பொறுப்பு போக்குவரத்து போலீசாரின் மீது உள்ளதால் அவர்கள் அக்கறையுடன செயல்பட்டு வருகின்றனர். நகரில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்