தச்சு தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை

காய்கறி வாங்க சென்றபோது தச்சு தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2023-02-23 18:45 GMT

ஞானபாரதி:

மராட்டியத்தை சேர்ந்தவர்

மராட்டியத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 46). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் குடும்பத்துடன் குடியேறினார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் மங்கனஹள்ளி வீரபத்ரேஸ்வரா லே-அவுட் 2-வது கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தச்சு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.

பின்னர், காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அவர் வெளியே புறப்பட்டார். அவர் அந்த பகுதியில் உள்ள 2-வது கிராஸ் அருகே சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை மர்மகும்பல் வழிமறித்தது.

கழுத்து அறுத்து கொலை

மேலும், தினேஷ் குமாரை கடுமையாக தாக்கிய கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும், தினேஷ் குமார் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய தினேஷ் குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஞானபாரதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணையை தொடங்கினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பர்கி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அந்த பகுதியில் சோதனை செய்தபோது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 40 அடி தூரத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கிடந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தினேஷ் குமாரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்