டெல்லியில் துப்பாக்கி முனையில் கார் கடத்தல்: சில்லிடும் பரபரப்பு வீடியோ

டெல்லியில் துப்பாக்கி முனையில் நபரை மிரட்டி அவரிடம் இருந்த கார் ஒன்றை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்ற வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-30 15:42 GMT

புதுடெல்லி,



டெல்லியில் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாக கூறப்படும் கண்டோன்மென்ட் பகுதியில் ஆடம்பர ரக கார் ஒன்றை கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி, கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதன்படி, கார் ஒன்று சாலையின் ஓரத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வந்து நின்றது. அதற்கு பக்கத்தில் பைக் ஒன்றை ஓட்டி செல்ல முற்பட்டவர்களில் ஒருவர், காரை கண்டதும் சற்று நடந்து செல்கிறார்.

காரின் ஓட்டுனர் பகுதியில் இருந்து ஒருவர் கீழே இறங்குகிறார். உடனே நடந்து சென்ற நபர் திரும்பி வந்து, அவரை நெருங்கி கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். மற்றொரு முகமூடி அணிந்த நபர் காரை திறக்க முயல்கிறார்.

இதனால், அவர்கள் அருகே நின்றிருந்த மற்றொரு கார் உடனடியாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில், காரை ஓட்டி வந்த நபர் பாதுகாப்பிற்காக அருகே மக்கள் கூடியிருந்த பகுதிக்கு செல்கிறார்.

அவரிடம் இருந்த பர்ஸ், கார் சாவி ஆகியவற்றை பறிக்க முயற்சி நடக்கிறது. துப்பாக்கியை கொண்டு சுட அவர்கள் முயற்சிக்கின்றனர். துப்பாக்கியுடன் வந்த நபரை கண்டதும் மற்றவர்கள் உடனடியாக கிளம்பி செல்கின்றனர்.

இதன்பின்னர், கார் ஓட்டுனரிடம் இருந்து கார் சாவியை மிரட்டி வாங்கி கொண்டு அவர்கள் செல்கின்றனர். அதன்பின்னர், சுற்றியிருந்தவர்கள் மீண்டும் அந்த பகுதிக்கு வந்து பயத்துடன் தங்களது வாகனத்தில் ஏறி புறப்பட்டு செல்கின்றனர்.

துப்பாக்கி முனையில் மிரட்டிய 3 பேர் கொண்ட கும்பல், காரை உடனடியாக கடத்தி கொண்டு அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்