கார்-அரசு பஸ் மோதல்; 4 பேர் பரிதாப சாவு
மைசூருவில் கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
மைசூரு:
மைசூருவில் இருந்து நேற்று காலை ஹாசனுக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா மானுகானஹள்ளி கிராமத்தில் வந்தபோது அதே சாலையில் முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தறிகெட்டு ஓடி கார் மீது மோதி, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் வந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்கள் சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.