சரக்கு லாரி மீது கார் மோதல்; தாய்-மகன் சாவு
மண்டியா அருகே சரக்கு லாரி பிரேக் பிடித்ததால், பின்புறம் வந்த கார் மோதியதில் குடகை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்தனர்.
மண்டியா:-
சாலை விபத்து
குடகு மாவட்டம் நாபொக்கலுவை சேர்ந்தவர் முத்தப்பா (வயது 54). இவரது மனைவி கவிதா (47). இவர்களது மகன் ஆர்யா அய்யப்பா (14). இவர்கள் அனைவரும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். யுகாதி பண்டிகையொட்டி, இவர்கள் 3 பேரும் குடகு மாவட்டத்திற்கு சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் நேற்று பெங்களூரு திரும்பி கொண்டிருந்தனர்.
மண்டியாவை அடுத்த பெங்களூரு- மைசூரு அதிவிரைவுச் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்புறம் சென்ற சரக்கு லாரி ஒன்று திடீரென்று பிரேக் பிடித்தது. இதை கார் ஓட்டி வந்த முத்தப்பா கவனிக்கவில்லை. வந்த வேகத்தில் கார், சரக்கு லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரின்முன்பு பகுதி முழுவதும் அப்பளம் போன்று நொறுங்கியது.
தாய்-மகன் சாவு
இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் ெசய்த ஆர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். முத்தப்பா மற்றும் கவிதாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்காக போராடி கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கவிதா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். முத்தப்பாவிற்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த மண்டியா புறநகர் போலீசார் ஆர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
டிரைவரின் கவன குறைவு
பின்னர் இது குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் லாரி டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடந்திருப்பதாக தெரியவந்தது. இந்த விபத்தை தொடர்ந்து லாரி டிரைவர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த னர்