கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்து - 13 பேர் பலி
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலியாகினர்.;
பெங்களூரு,
ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு குழந்தை மற்றும் 4 பெண்கள் உட்பட 14 பேர் காரில் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த இவர்கள் தசரா விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரம் மாவட்டத்தில் பகேபள்ளி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் கார் டிரைவருக்கு சாலை சரியாக தெரியவில்லை.
அப்போது சாலையின் ஓரம் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதன் மீது கார் வேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 பேர் இறந்தனர். இந்த கோரமான விபத்தில் மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளனர். ஒருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.