இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியதற்காக தேச விரோதி என முத்திரை குத்த முடியாது: ராகுல் காந்தி
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியதற்காக தேச விரோதி என முத்திரை குத்த முடியாது என கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார அமைச்சகம் தலைமையேற்று நடத்தியது. இதன்படி, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அவர் கூட்டத்தில் கமிட்டி உறுப்பினர்களிடம், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் பற்றி விரிவாக பேசினார். இந்த கூட்டத்தில் தொடக்க சுற்றின்போது, ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை. அப்போது, அந்நிய நாட்டில் இந்திய ஜனநாயகம் பற்றி அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர் என எம்.பி. ஒருவர் கூறியதும், அதற்கு பதிலளிக்கும் வகையில், ராகுல் காந்தி பேசினார்.
அவர் கூறும்போது, இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்ப மட்டுமே செய்தேன். இந்திய ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியதற்காக தேச விரோதி என என் மீது முத்திரை குத்த முடியாது என கூறியுள்ளார். இதேபோன்று, எந்த நாட்டையும் தலையிடும்படி கூறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இது உள்நாட்டு விவகாரம் என்றும் அதனை அவர்கள் தீர்த்து விடுவார்கள் என்றும் நம்புகிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் அரசியல் பேசியதற்காக பா.ஜ.க. எம்.பி.க்கள் சிலர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் பற்றி பேசாமல் அதனை திசை திருப்ப சிலர் முயல்கின்றனர். இந்திய ஜனநாயகத்தில் நெருக்கடிநிலை காலம் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியது என்ற வகையில் அவர்கள் கூறினர்.
எனினும் இந்த விவாதத்தின்போது தலையிட்ட மந்திரி ஜெய்சங்கர், ராகுல் காந்தியிடம் கூட்டத்திற்கு தொடர்புடைய விசயங்களை மட்டும் பேசும்படியும், அரசியல் விசயங்கள் வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், லண்டன் நகரில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவின் ஜனநாயகம் பற்றி பேசினார்.
இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதற்கான எந்த விசயங்களையும் செய்யவில்லை. ஆனால், அவை இந்தியாவிடம் இருந்து வர்த்தகமும், பணமும் பெற்று கொள்கிறது என பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.