போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி பேரணி; மம்தா பானர்ஜி அறிவிப்பு
டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இன்று மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
கொல்கத்தா,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்று பேரணி நடத்தினார். இதன்படி, ஹஜ்ரா பகுதியில் இருந்து ரபீந்திர சதன் பகுதி வரை இந்த ஆதரவு பேரணி நடைபெற்றது.
அப்போது மம்தா பேசும்போது, எங்களுடைய குழு ஒன்று கொல்கத்தாவில் இருந்து சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து, ஆதரவை வழங்கும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். அதனாலேயே இன்று பேரணி நடத்தப்பட்டு உள்ளது என கூறினார்.
இந்த பேரணியானது நாளையும் தொடரும். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நமது நாட்டின் பெருமைக்கு உரியவர்கள். உங்களது போராட்டத்தில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என அப்போது அவர் கூறினார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் இன்று கூறும்போது, டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காந்தி சிலையை நோக்கி நாங்கள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக செல்வோம் என கூறியுள்ளார்.
எனினும், உத்தர பிரதேசத்தில் பொது பேரணி ஒன்றில் சரண் சிங் நேற்று பேசும்போது, எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூட தூக்கில் தொங்க தயார் என கூறினார்.
ஏதேனும் சான்றுகள் உங்களிடம் இருப்பின், கோர்ட்டில் சமர்ப்பியுங்கள். எந்த தண்டனையையும் ஏற்க தயார். டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமென்றால், என்னை அவர்கள் கைது செய்வார்கள் என சரண் சிங் கூறினார்.
அவர் இன்றும் இதே விசயங்களை மீண்டும் வலியுறுத்தி பேசினார். தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என சரண் சிங் கூறியுள்ளார்.