பிளஸ்-2 தேர்வில் காப்பியடித்தவர்களின் தேர்ச்சி ரத்து - பொது கல்வித்துறை அதிரடி
மாணவர்கள் தேர்வு எழுதிய போது தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது. தேர்வின் போது காப்பியடித்ததாக 112 பேர் அதிரடிப்படையினரால் பிடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 78.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதனிடையே தேர்வின் போது காப்பியடித்து பிடிபட்ட 112 பேரிடம் தேர்வறை கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது காப்பியடித்து தேர்வு எழுதியது உறுதியானது. இதை தொடர்ந்து 112 பேரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஜூன் மாதம் நடைபெறும் துணை தேர்வு எழுத 112 மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில் தேர்வின் போது காப்பியடித்து பிடிபட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய போது தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேரள பொது கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.