பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த திட்டம்
விபத்து, திருட்டை தடுக்க பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
விபத்து, திருட்டை தடுக்க பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி விரைவுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த சாலையில் கடந்த 6 மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட விபத்துகளில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், விரைவுச்சாலையில் வாகன ஓட்டிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது.
அதிநவீன கேமரா
இந்த நிலையில், விரைவுச்சாலையில் உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிநவீன கேமராக்களை விரைவுச்சாலையில் பொருத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு 800 மீட்டருக்கும் கேமராவை பொருத்தி வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக செல்லும் வாகனங்களை படம் பிடித்து அந்த படத்துடன் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அத்துடன் அதிவேகமாக சென்றதாக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்.
மேலும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க இந்த கேமரா உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.