பெங்களூருவில் முக்கிய 50 சந்திப்புகளில் உயர்தர கேமராக்கள் பொருத்தம்

விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய பெங்களூருவில் முக்கிய 50 சந்திப்புகளில் உயர்தர கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக போக்குவரத்து சிறப்பு கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-08 21:55 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து விதிமீறல்களும் உயருகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள முக்கிய 50 சந்திப்புகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை துள்ளியமாக படம் பிடித்து அவற்றுக்கு அபராதம் விதிக்கும் வகையில் உயர்தர தொழில்நுட்பத்தால் ஆன கேமராக்களை போக்குவரத்து துறை பொருத்தி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சிறப்பு கமிஷனர் சலீம் கூறுகையில், 'பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறுகின்றனர்.

இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணிப்பது, செல்போன் பேசியபடி ஓட்டுவது, ஹெல்மேட் அணியாமல் செல்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர்கள் முயற்சி செய்யும்போது விபத்தில் சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. அதனை தடுக்கும் நோக்கிலும், விதிமீறலில் ஈடுபடுபவர்களை துள்ளியமாக கண்டறிந்து, அபராதம் விதிக்கும் நோக்கிலும் பெங்களூருவின் முக்கிய 50 சந்திப்புகளில் உயர்தர தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களை புகைப்படம் எடுத்து, அவர்களது செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்