ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை - ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2023-12-06 03:27 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொஹமெதி. இவர் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2018ம் ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.

இதனிடையே, ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் நேற்று ஜெய்ப்பூரின் ஷாய்ம் நகரில் உள்ள தனது வீட்டில் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுக்தேவ் சிங்கின் வீட்டிற்கு வந்த 3 பேர் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுக்தேவ் சிங் மீது தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். எஞ்சிய 2 பேர் தப்பியோடினர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சுக்தேவ் சிங் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு இன்று ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ராஜஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்