மனைவி, மகனை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை
கார்வாரில் கடன் தொல்லையால் மனைவி, மகனை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார்.;
மங்களூரு:-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலதிபர்
உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே சிட்டகுலா போலீஸ் எல்லைக்குட்பட்ட கோபஷிட்டா பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பட்டீல் (வயது 40). இவரது மனைவி ஜோதி பட்டீல் (35). இந்த தம்பதியின் மகன் தக்ஷன் பட்டீல் (12). தொழிலதிபரான ஷியாம் பட்டீல், தனது மனைவி மற்றும் மகனுடன் கோவாவில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஷியாம் பட்டீல் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அவருக்கு தொழிலில் லாபம் கிடைக்காததால், வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
கொலை-தற்கொலை
இந்த நிலையில் நேற்று ஷியாம் பட்டீல் தனது மனைவி மற்றும் மகனுடன் சொந்த ஊரான கார்வாருக்கு வந்தார். பின்னர் அவர்களை காளி ஆற்றங்கரையோரம் அழைத்து சென்றார். இதையடுத்து அவர் ஆற்று பாலத்தில் இருந்து மனைவி ஜோதி மற்றும் மகன் தக்ஷன் ஆகியோரை காளி ஆற்றுக்குள் தள்ளிவிட்டார். இதில் ஆற்றில் விழுந்த அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து காரில் கோவாவுக்கு சென்ற ஷியாம் பட்டீல், அங்குள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் காளி ஆற்றில் பெண் மற்றும் மகனின் உடல் மிதப்பதாக சிட்டகுலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டது தொழிலதிபர் ஷியாம் பட்டீலின் மனைவி ஜோதி மற்றும் மகன் தக்ஷன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தான், கோவாவில் உள்ள வீட்டில் ஷியாம் பட்டீல் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்துெகாண்டது தெரியவந்தது.
அதாவது, மனைவி மற்றும் மகனை காளி ஆற்றில் தள்ளி கொன்றுவிட்டு அவர் கோவாவுக்கு சென்று தற்கொலை செய்தது தெரியவந்தது.