மங்களூருவில் குமாரதாரா ஆற்றில் குதித்து தொழில் அதிபர் தற்கொலை
மங்களூருவில் குமாரதாரா ஆற்றில் குதித்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா குட்மாரு அருகே சாந்திமொகரு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் பூஜாரி (வயது 60). தொழில்அதிபர். இவருக்கு சொந்தமாக அல்கார் பகுதியில் ஹார்டுவேர் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகர், தனது காரில் அந்தப்பகுதியில் ஓடும் குமாரதாரா நோக்கி சென்றார். பின்னர் அவர் காரை ஆற்றங்கரையில் நிறுத்திவிட்டு, திடீரென்று பலூனை கட்டிக் கொண்டு ஆற்றுக்குள் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், சந்திரசேகரை மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடபா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.