ஆண்டர்சன்பேட்டையில் முட்புதர்கள் அகற்றம்
ஆண்டர்சன்பேட்டையில் தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து நகரசபை நிர்வாகம் முட்புதர்களை அகற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கோலார் தங்கவயல்
பழைய போலீஸ் குடியிருப்பு
கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையில் உள்ளது தூய மரியன்னை பள்ளி. இந்த பள்ளியின் அருகே பழைய போலீஸ் குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் கிடந்ததால் பாழடைந்தது. இதனால் கட்டிடத்தை சுற்றி முட்புதர்களாக காட்சி அளித்தது.
இந்த முட்புதர்களுக்குள் பாம்புகள் அதிகளவு குடி புகுவதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மேலும் இந்த பாம்புகள், அங்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு, கோழிகளை கடித்து கொன்றுவிடுகிறது.
அதேபோல மழை நேரங்களில் முட்புதர்களில் இருந்து வெளியேறும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியின் வழியாக பொதுமக்கள் பயணிக்க முடியாது. அந்த அளவிற்கு கொடூரமாக காட்சி அளித்தது.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் முட்புதர்களை அகற்றிவிட்டு, புதிய போலீஸ் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நகரசபைக்கு கோரிக்கை வைத்தனர்.
''தினத்தந்தி'' செய்தி
ஆனால் நகரசபை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகள் பாம்பு கடித்து செத்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டது.
நகரசபை நிர்வாகம் மற்றும் ஆண்டர்சன்பேட்டையை சேர்ந்த கவுன்சிலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரித்தனர்.
இந்தநிலையில் இதுகுறித்து செய்தி ''தினத்தந்தியில்'' வெளியானது. இதுநகரசபை நிர்வாகிகள் மற்றும் கோலார் தங்கவயலை சேர்ந்த சில கவுன்சிலர்களின் கவனத்திற்கு சென்றது. உடனே அவர்கள் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
முட்புதர் அகற்றம்
அதன்படி நேற்று 50-க்கும் ேமற்பட்ட தூய்மை பணியாளர்களை நகரசபை நிர்வாகம் பணியில் அமர்த்தி முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டது. இதற்கு கவுன்சிலர் தங்கராஜ் என்பவர் உதவியாக இருந்துள்ளார்.
இதையடுத்து அந்த பகுதி தற்போது தூய்மையாக இருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த முட்புதர்களை அகற்ற காரணமாக இருந்த ''தினத்தந்திக்கும்'', நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.