உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தரூ.23 கோடி தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சிக்கமகளூருவில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.23 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-04-19 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.23 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் பறிமுதல் செய்தனர்.

தீவிர வாகன சோதனை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனை உள்பட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் போலீசாரும், பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக சோதனைச்சாவடியில் போலீசாரும், பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ரூ.23 கோடி நகைகள்

அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். வாகனத்திற்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசாரும், பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். அப்போது அதில் 40 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.23 கோடி ஆகும். அதுபற்றி வாகன டிரைவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் பதிலளித்துள்ளார். போலீசார் மற்றும் அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த நகைகள், வெள்ளி பொருட்களை அவர் பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு கொண்டு செல்வதும், ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து 40 கிலோ தங்க நகைகள், 20 வெள்ளி பொருட்கள் மற்றும் அவற்றை கொண்டு வந்த ஏ.டி.எம். வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பசவனதிப்பா கிராமத்தில் ஒரு லாரியில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்