6 கடைகளின் பூட்டை உடைத்து சிகரெட், பணம் திருட்டு

தளப்பாடி பகுதியில் 6 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் சிகரெட், பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-10 18:45 GMT

மங்களூரு:-

நெடுஞ்சாலையோர கடைகள்

தட்சிணகன்னடா மங்களூரு அருகே தளப்பாடி கேரளா-கர்நாடக எல்லையில் உள்ளது. இந்த நிலையில் தளப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மளிகை, ஜெராக்ஸ் கடை உள்பட பல்வேறு கடைகள் உள்ளது. அதே பகுதியில் அஷ்ரப், குல்தீப், ஸ்ரீதர், முகமது, சங்கர் ஆகிய 6 பேருக்கு சொந்தமான கடைகளும் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இவர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர்கள் இது குறித்து உல்லால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

ஒரே கும்பல் கைவரிசை

அதில் காரில் வந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து, உள்ளிருந்த சிகரெட் பாக்கெட்டுகள், மளிகை பொருட்கள், பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

ஆனால் திருடுபோன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரியவரவில்லை. இதையடுத்த மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர்.

6 கடைகளில் திருட்டு நடந்த பகுதியையொட்டி கேரள மாநிலம் காசர்கோட்டில் 2 கடைகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே இந்த 8 கடைகளிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வலைவீச்சு

இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்