மந்திரி செலுவராயசாமிக்கு எதிரான லஞ்ச புகார்-சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

கர்நாடக விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமிக்கு எதிரான லஞ்ச புகார் கடிதம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-08-08 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.

காங்கிரஸ் அரசு

இந்த ஆட்சி பொறுப்பு ஏற்று 2 மாதங்கள் ஆகும் நிலையில் மந்திரிகள் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி விவகாரம் புயலை கிளப்பி வருகிறது.

மேலும் எதிர்க்கட்சிகள், வளர்ச்சிப் பணிக்கான ஒப்பந்ததாரர்களிடம் மந்திரிகள் கமிஷன் கேட்பதாகவும், அரசு ஊழியர்கள் இடமாற்றத்தில் பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாகவும் ஜனதாதளம்(எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

மேலும் இந்த முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், நேரம் வரும்போது பிரதமரிடம் அந்த ஆதாரங்களை வழங்குவேன் என்றும் அவர் கூறி வருகிறார். இதுவும் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

மந்திரி செலுவராயசாமி

இந்த நிலையில், கர்நாடக மந்திரிசபையில் விவசாயத் துறை மந்திரியாக இருப்பவர் செலுவராயசாமி. மண்டியா மாவட்டம் நாகமங்களா தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்து வருகிறார்.

இதற்கிடையே மந்திரி செலுவராயசாமி விவசாயத்துறையில் மாதத்திற்கு ரூ.6 முதல் ரூ.7 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றும், பணியிடமாற்றத்திற்கும் லஞ்சம் வாங்கி தர வேண்டும் என்றும் கூறியதாக மண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயத்துறை உதவி இயக்குனர்கள் 7 பேர் கையெழுத்திட்ட கடிதம் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு சென்றது.

கவர்னர் அரசுக்கு உத்தரவு

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி கவர்னர் அலுவலகம், கர்நாடக அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிைடயே இந்த கடிதம் போலியானது என்றும், மந்திரி செலுவராயசாமியை அரசியல் ரீதியாக பழிவாங்க எதிர்க்கட்சிகளின் சதி தான் இந்த போலி புகார் கடிதம் என்றும் காங்கிரசார் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து மண்டியா காங்கிரசார் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரசார் மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.

சி.ஐ.டி. விசாரணை

இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து மந்திரி மீதான புகார் கடிதம் பற்றி விசாரிக்க கர்நாடக அரசு சி.ஐ.டி. (குற்றப் புலனாய்வு குழு) உத்தரவிட்டுள்ளது.

அதாவது, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பாவின் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவசாயத்துறை மந்திரிக்கு எதிராக வெளியாகியுள்ள லஞ்ச புகார் கடிதம், அரசுக்கு கவர்னர் அனுப்பிய கடிதம் உண்மையானது தான் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

ஆனால் விவசாயத்துறை இணை இயக்குநர் அசோக், நாங்கள் யாரும் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வரும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம். இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

புகார் அளிக்கவில்லை

காண்டிராக்டர்கள், தங்களுக்கு நிலுவை தொகையை பட்டுவாடா செய்யவில்லை என்று கூறி பணிகளை நிறுத்திவிட்டு கவர்னரை சந்தித்து புகார் அளிக்கவில்லை. திட்ட பணிகள் குறித்து விசாரணை நடத்த கோரி அவர்கள் கவர்னரை சந்தித்துள்ளனர். பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய உள்ளன.

உடுப்பி தனியார் கல்லூரி ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்பு டி.எஸ்.பி. அளவிலான அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டனர். உயர்மட்ட விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டாலும் அதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது. பா.ஜனதா ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட சி.ஐ.டி. சோதனைகள் மூடிமறைக்கப்பட்டதா?.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

போலியான கடிதம்

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மந்திரி செலுவராயசாமி தொடர்பான ஒரு கடிதம் பொது வெளியில் பரப்பி வருகிறார்கள். இது போலியான கடிதம்.

இதுகுறித்து விவசாயத்துறை இணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். எந்த அதிகாரியுடம் கவர்னருக்கு புகார் கடிதம் எழுதவில்லை என்று அவர் கூறியுள்ளார். போலி கடிதம் விஷயம் ஆச்சரியமாக உள்ளது. இதன் பின்னணியில் பா.ஜனதா உள்ளதா? அல்லது உங்களின் சகோதரர் (குமாரசாமி) உள்ளாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குமாரசாமி பதிலடி

இதற்கு குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மந்திரி செலுவராயசாமியின் லஞ்ச புகார் விவகாரத்தை முதல்-மந்திரி சித்தராமையா வெட்கம் இல்லாமல் நியாயப்படுத்துகிறார்.

அவர் நமது மாநிலத்தின் மரியாதையை சீர்குலைத்துள்ளார். மந்திரியின் கொள்ளையை நியாயப்படுத்துவது அருவெறுப்பானது. மந்திரிக்கு எதிரான கடிதம் போலி என்றால், அரசுக்கு கவர்னர் தவறுதலாக கடிதம் எழுதியுள்ளாரா?. கவர்னர் மாளிகையின் புனிதத்தை இந்த அரசு சந்தேகிக்கிறதா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

நளின்குமார் கட்டீல்

பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தனது டுவிட்டர் பதிவில், "தற்போது மந்திரி செலுவராயசாமியின் ஆட்டம். அதிகாரிகள் மூலம் பணம் வசூலிக்க மந்திரிகளுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளதா?. ஊழல் விவகாரங்களை திசை திருப்ப அரசுக்கு எதிராக வரும் புகார் கடிதங்களை போலி என்று கூறுகிறார்கள். செலுவராயசாமி மீதான கடிதம் போலி என்று கூறி கவர்னர் மாளிகையின் புனிதம் மற்றும் அவரது நடவடிக்கையை காங்கிரஸ் அரசு அவமதிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்