கல்வான், தாவாங்கில் இந்திய படைகள் காட்டிய வீரம் பாராட்டுக்குரியது - பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்

கல்வான், தாவாங்கில் இந்திய படைகள் வெளிப்படுத்திய தைரியம், வீரம் பாராட்டுக்குரியது என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-17 09:19 GMT

புதுடெல்லி,

அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன ராணுவத்தினர் பின் வாங்கி ஓடினர்.

இதேபோல், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்திற்கும், சீன படைக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கால்வான், தவாங்கில் இந்திய படைகள் காட்டிய வீரம் பாராட்டுக்குரியது என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கால்வானிலும் தவாங்கிலும் இந்திய படைகள் தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்திய விதத்திற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

நாங்கள் எதிர்க்கட்சியில் உள்ள எந்த தலைவரின் நோக்கத்தையும் கேள்வி கேட்கவில்லை, கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம். அரசியல் என்பது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பொய்யை வைத்து நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது.

சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் முறையே அரசியல் என்று அழைக்கப்படுகிறது. யாருடைய நோக்கத்தையும் எப்போதும் சந்தேகப்படுவதன் காரணம் எனக்கு புரியவில்லை என ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்தியா உலக அரங்கில் நிகழ்ச்சி திட்டங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்