கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி புதிய வகை வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் - மருத்துவ நிபுணர்
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
நாடு முழுவதும் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசிக்கு கால இடைவெளி 9 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து டெல்லியை சேர்ந்த மூத்த நுரையீரல் நிபுணர், டாக்டர் நிகில் மோடி கூறுகையில், "கொரோனா தடுப்பூசிகள் வரையறுக்கப்பட்ட காலகட்டத்திற்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதால், நாம் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.
புதிய தடுப்பூசிகள் வரவிருக்கும் அனைத்து புதிய வைரசின் மாறுபாடுகளையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்வது புதிய வகை வைரசுகளுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்" என்று தெரிவித்தார்.