இளம்பெண் மரணத்துக்கு தடுப்பூசி காரணமா? பில் கேட்ஸ், சீரம் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இருந்து ரூ.1,000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Update: 2022-09-03 05:55 GMT

மும்பை,

கொரோனா தடுப்பூசியால் மரணம் ஏற்பட்டதாக கூறப்படும் புகாரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ், சீரம் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மூன்று தரப்புக்கும் எதிராக திலீப் லுனாவத் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் லுனாவத்தின் மகள் சினேகல் லுனாவத் ஒரு மருத்துவர் ஆவார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் சினேகல் லுனாவத் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசியால் மரணம் ஏற்பட்டதாக கூறி, ரூ.1000 கோடி இழப்பீடு கேட்டு அவரது தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.கொரோனா தடுப்பூசி தொடர்பான தவறான உண்மைகளை அரசாங்கமும் மற்றவர்களும் பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவில் திலீப் லுனாவத் கூறியிருப்பதாவது, இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தவறான கூற்றுக்கள் கூறப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மனுதாரர் திலீப் லுனாவத் அவுரங்காபாத்தில் வசிப்பவர். தமங்கானில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூத்த விரிவுரையாளராக அவரது மகள் இருந்தார்.மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவரது மகளும் இந்த தடுப்பூசியை எடுக்க வேண்டியதாயிற்று.

ஜனவரி 28, 2021 அன்று சினேகல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, சினேகலுக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது.அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சினேகல் மார்ச் 1, 2021 அன்று இறந்தார். தடுப்பூசியின் பக்க விளைவுதான் மரணத்திற்கு காரணம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் குறித்த மத்திய அரசின் குழு அக்டோபர் 2, 2021 அன்று சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இருந்து ரூ.1,000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி மனு விசாரணைக்கு வந்தது.இப்போது மனு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பதில் கேட்டு அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் மும்பை ஐகோர்ட்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்.

மேலும் செய்திகள்