5 நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! ஆட்டிசம் மன நோயாளியின் புரளியால் பெரும் பதற்றம்!

குருகிராம் நகரில் அமைந்துள்ள ஓட்டலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

Update: 2022-09-13 12:37 GMT

குருகிராம்,

தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள குருகிராம் நகரில் அமைந்துள்ள தி லீலா ஓட்டலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

இன்று காலை சுமார் 11.35 மணியளவில் குருகிராம் நகரில் அமைந்துள்ள ஆம்பியன்ஸ் மால் வளாகத்தில் அமைந்துள்ள தி லீலா ஓட்டலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அப்போது அந்த ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்க்கபட்டது. உடனே ஓட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய்கள் மூலம் லீலா ஓட்டலில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்தனர். அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் வெடிகுண்டு இல்லை என தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், அழைப்பு வந்த தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மணி நேரம் கழித்து, அந்த அழைப்பாளர் யார் என கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக 24 வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட நபர் ஒரு புரளியை கிளப்பியுள்ளார்.

போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு அல்லது ஏஎஸ்டி என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் என்று தெரியவந்தது. அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஓட்டல் வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் செய்யப்பட்ட புரளி அழைப்பு இது. அந்த நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஓட்டல் வளாத்தில் ஒரு முழுமையான சோதனைக்குப் பிறகு, அங்கு வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்க அதிகாரிகள் அனுமதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்