மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது குண்டுவீச்சு - 5 பேர் படுகாயம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாங்கோர் பகுதியில் நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது மர்ம நபர்கள் சிலர் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய மதசார்பற்ற முன்னணி(ஐ.எஸ்.எப்.) கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குத்லை நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை பாங்கோர் தொகுதியின் ஐ.எஸ்.எப். கட்சி எம்.எல்.ஏ. நவ்சாத் சித்திக் மறுத்துள்ளார். அதோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் ஐ.எஸ்.எப். கட்சி தொண்டர்கள் மீது குண்டு வீசியதாகவும், அதில் அவர்களது கட்சி தொண்டர்களே காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜாதவ்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பாங்கோர் பகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த குண்டுவீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.