பயணிகளுடனான மோதல் எதிரொலி ரெயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்த திட்டம்
ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
சமீபத்தில், ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுபோல், பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இத்தகைய புகார்கள் வரும்போது, அவைகுறித்த உண்மைத்தன்மை அறிவதற்காக, டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில், மத்திய ரெயில்வேயில் சோதனைமுறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 50 'பாடி கேமரா'க்கள் வாங்கி, மும்பை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வெற்றியை பொறுத்து, நாடு முழுவதும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கேமராவின் விலை ரூ.9 ஆயிரம். அதில், 20 மணி நேரத்துக்கு நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும்.
இதன்மூலம், ஒரு புகார் வந்தால், யார் மீது தவறு என்று வீடியோ காட்சியை போட்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தால், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும், தேவையின்றி பெயர் கெட்டுப்போவது தவிர்க்கப்படும் என்று ரெயில்வே செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.