ரத்த தானம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க மக்கள் வரிசையில் நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-04 03:25 GMT

புதுடெல்லி,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர். இதனால், வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாள் இரவில் 500 யூனிட் ரத்த தானம் பெறப்பட்டுள்ளதாகவும் 3000த்துக்கும் அதிகமான யூனிட் ரத்தம் கையிருப்பு உள்ளதாகவும் ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் பலர் விடிய விடிய நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், உள்ளூர்வாசிகளின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க மக்கள் வரிசையில் நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பவை. ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்தவுடன், மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமானோர் ரத்ததானம் செய்ய வரிசையில் நின்றதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன்.

மீட்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே, தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை, உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு சேவை, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் தரையில் அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன். தங்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்