ஹவுரா கலவரங்களுக்கு பின்னால் பாஜக உள்ளது: மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி விமர்சனம்
நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா,
பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்து வந்த நுபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் நபிகள் நாயகத்தைப்பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், 57 இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது.
இந்த நிலையில், நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்தது.
இது குறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "நான் முன்பே கூறி இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.